இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக தொடர்புகள் ஒரு புதிய உச்சத்தை நோக்கி பயணிக்கின்றன. மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் வாய்ப்பு மிக அருகிலிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூலை 8ம் தேதி வெளியாகும் என நம்பப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இந்திய வர்த்தகத்துறை சார்பில் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு தற்போது வாஷிங்டனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களாக இந்த ஒப்பந்தம் குறித்த தனது உளறல்களில் சுட்டிக்காட்டியிருந்தார். அவர், “இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் நடைபெற உள்ளது. சீனாவுடன் தொடங்கிய ஒப்பந்தங்களைப் போல அல்லாது, தேர்ந்தெடுத்த சில நாடுகளுடன் மட்டுமே இத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம்,” என கூறினார். இது, இந்தியாவுக்கு வியாபார ரீதியில் ஒரு முக்கிய பங்கு ஒதுக்கப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.
இணைய வரிகள், இறக்குமதி வரிகள், பாதுகாப்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் போன்ற பல துறைகளில் இவ்விரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக உரையாடி வந்துள்ளன. தற்போது அந்த உரையாடல்கள் ஒரு நிலையான முடிவுக்கு வந்துள்ளன. பொருளாதார வல்லுநர்கள் இந்த வர்த்தக ஒப்பந்தம், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் அமெரிக்க முதலீடுகளுக்கு வித்திடும் துடிப்பாக அமையும் என நம்புகின்றனர்.
டிரம்பின் சர்வதேச வரி உத்தரவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைவதால், இதற்கு முந்தைய நாளான ஜூலை 8ம் தேதி இந்த வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஒப்பந்தம் இந்தியாவின் உலகளாவிய வர்த்தக நிலையை மேம்படுத்தும் முக்கிய திருப்புமுனையாகும்.