புதுடில்லி: ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ, உலக பாரம்பரிய சின்னங்களுக்கான 2024-25 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மராத்தியரால் கட்டப்பட்ட மஹாராஷ்டிரா மாநிலத்தின் 11 கோட்டைகளுடன் தமிழகத்தின் செஞ்சி கோட்டையும் இடம் பிடித்துள்ளது. இந்த முக்கிய முடிவு, பிரான்சின் பாரிசில் நடைபெற்ற உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வில் எடுக்கப்பட்டது.

சல்ஹெர், சிவனேரி, ராய்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க் உள்ளிட்ட கோட்டைகள் மஹாராஷ்டிராவில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 17-19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இந்த கோட்டைகள் அனைத்தும் போர்திறனும், கட்டிடக் கலை மேன்மையும் கொண்டவை. இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கிய பங்கு வகித்த இந்த கோட்டைகள், எளிதில் கைப்பற்ற முடியாத வகையில் மலையச் சிகரங்களில், கடல் அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் செஞ்சி கோட்டை, வீர வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது. இந்த கோட்டை மூன்று மலைகளைக் கொண்டு கட்டப்பட்டது. செஞ்சி கோட்டையின் கட்டிடக்கலை நுட்பம், அதன் அழிவில்லாத நிலைத்தன்மை, தமிழர்களின் புராதன அறிவையும், மரபுடைமை பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துச் சொல்கிறது. இதனை அமைச்சர் தங்கம் தென்னரசும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து பெருமையுடன் வாழ்த்தியுள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிரதமர் மோடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், இந்தியர்களின் பெருமை இதன்மூலம் உலகிற்கு தெரியவந்துள்ளது என்றும், செஞ்சி கோட்டையை நேரில் பார்வையிட்டு அதன் வரலாற்று மகத்துவத்தை உணருமாறு அனைவரையும் அழைத்துள்ளார். மராத்தியர்களின் வீரமும், இந்திய கலாசாரத்தின் செழுமையும் உலக பாரம்பரியத்தை வளமாக்கியுள்ள நிலையில், இந்த அங்கீகாரம் தேசிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது.