இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங், சந்திரயான் 4 திட்டம் 2027-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த திட்டம், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் மற்றும் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவந்து ஆய்வு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ராக்கெட்டுகள், ஐந்து வெவ்வேறு கூறுகளை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தும்.
மேலும், 2026-ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர்கள், ககன்யான் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி பாதுகாப்பாக திருப்பி அழைக்கப்படுவர். அதேபோல், 2026-ல் சமுத்திரயான் திட்டம் கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு ஆராய்ச்சி நடத்தும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ந்துள்ளது, இதன் மூலம் இந்தியா உலகளாவிய விண்வெளி சக்தியாக உயர்ந்துள்ளது. 2025-ல் இந்திய விண்வெளி பொருளாதாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.