புதுடில்லி, மே 18 – இந்தியா வெப்ப அச்சுறுத்தலின் கடுமையான கட்டத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது. டில்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CEEW எனப்படும் “Council on Energy, Environment and Water” எனும் சிந்தனைக்குழாமின் புதிய ஆய்வு அறிக்கையின் படி, நாட்டின் 76 சதவீத மக்கள் அதிகம் முதல் மிக அதிக வெப்ப அபாயத்தில் வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்குள், அதிக வெப்பம் பதிவான பகல்களைவிட, அதிக வெப்பம் நிலவிய இரவுகளின் எண்ணிக்கை கவலைக்குரிய அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக டில்லி, சண்டிகர், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் அதிகாலையின் வெப்பநிலை 6 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் நிலவும் அதிக வெப்பம் பொதுவாக அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும். தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம், உடலுறுப்புகளின் செயலிழப்பு போன்ற பல பிரச்சனைகளை இது ஏற்படுத்தும். இதை பொருத்தவரை அதிக வெப்பம் உடலுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என CEEW ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
2030க்குள் இந்த வெப்ப அச்சுறுத்தலால் இந்தியா 3.5 கோடி நிரந்தர வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருப்பதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5 சதவீத இழப்பு ஏற்படக்கூடும் என ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் இரவு நேர வெப்பநிலை நீடித்து வருவது அதிகமாகவே காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிக வெப்ப அபாயத்தில் உள்ள முக்கிய 10 மாநிலங்களில் தமிழகம், டில்லி, கோவா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவை அடங்குகின்றன. இம்மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் தரப்புகள் வெப்ப அச்சுறுத்தலுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் பரிந்துரை. வெப்ப அலைகளை சமாளிக்க நகர்ப்புறங்களில் பசுமை பகுதிகளை பெருக்குதல், கூரையின் மேல் வெப்ப எதிர்ப்பு பாதுகாப்பு ஏற்படுத்தல், குடிநீர் மற்றும் குளிர்ந்த தஞ்சல் பகுதிகளின் வசதிகளை அதிகரித்தல் போன்றவை அவசியம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் வெப்ப நிலையையும் அதன் தாக்கத்தையும் கணக்கீடு செய்யும் வகையில், CEEW வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, நாடு முழுவதும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.