சென்னை: இந்தியா முழுவதும் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையதள சர்வர் நேற்று திடீரென பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் 1 மணி முதல் சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக அவசர ஏற்பாடாக போர்டிங் பாஸ் கையால் எழுதும் முறை தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து திருச்சி, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், ஹூப்ளி, கோவா, சீரடி, மும்பை, புனே, கோவை, மதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
இண்டிகோ ஏர்லைன்ஸ் இணையதளம் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இண்டிகோ ஏர்லைன்ஸைப் பொருத்தவரையில் சென்னை மட்டுமின்றி இந்தியா முழுவதும் இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணி நடந்து வருகிறது என்றனர்.