சென்னை: பல்வேறு பொருளாதார வளர்ச்சி குறிகாட்டிகளில் தமிழகம் முன்னிலை வகித்தாலும், ஜி.சி.சி., எனப்படும் சர்வதேச திறன் மையங்களை அமைப்பதில் பின்தங்கியுள்ளது என, தொழில் துறை செயலர் அருண்ராய் கூறினார்.
சென்னையில், மாநில அரசின் தொழில் வழிகாட்டி அமைப்பான ‘கெய்டன்ஸ் தமிழ்நாடு’ மற்றும் ‘கிரியேட் ஒர்க்ஸ்’ இணைந்து, ‘ஜிசிசி நெக்ஸ்ட்24’ என்ற மாநாட்டை நடத்தியது.
அதில் அருண்ராய் பேசியதாவது:
பெரும்பாலான பொருளாதார குறிகாட்டிகளில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருப்பினும், சர்வதேச திறன் மையங்களைப் பொறுத்தவரை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே போன்ற நகரங்களின் போட்டியை விட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.
நாடு முழுவதும் 1,800 ஜி.சி.சி.க்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் 250 மையங்கள் மட்டுமே உள்ளன. இதில் தமிழகம் எங்கோ தவறிவிட்டது. எனவே, மாநில அரசு ஜி.சி.சி.களை அமைத்து செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டிலேயே அதிக திறன் வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் தரமான வேலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது.
பல நகரங்கள் விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், மாநிலத்தின் பொருளாதாரம் சென்னையில் மட்டும் கவனம் செலுத்துகிறது. கோயம்புத்தூர் உட்பட சில நகரங்கள் இரண்டாம் நிலை பெருநகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி, மதுரை ஆகிய நகரங்களும் சர்வதேச திறமை மையம் அமைப்பதற்கு ஏற்ற நகரங்களாகும். இவ்வாறு அருண் ராய் கூறினார்.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான CBRE இன் அறிக்கையின்படி, 2030-க்குள் சென்னையில் உள்ள சர்வதேச திறமை மையங்களின் எண்ணிக்கை 450 ஆக உயரும். ஜிசிசி மற்றும் வணிக விரிவாக்கத்திற்கு சென்னை முக்கிய மையமாக இருக்கும் என்று அது கூறியது; மேலும், நாட்டின் சர்வதேச அளவில் திறன்மிக்க பணியாளர்களில் 11 சதவீதம் பேர் தமிழகம்தான்.
உலகின் முன்னணி நிறுவனங்களின் அலுவலகங்களை அமைப்பதற்குச் சாதகமான அனைத்து அம்சங்களையும் சென்னை கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.