பெங்களூரு: பணவீக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்திய குடும்பங்களில் சமையல் செலவு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கிரிசில் மார்க்கெட் இன்டலிஜென்ஸ் மற்றும் அனலிட்டிக்ஸ் தெரிவித்துள்ளது. காய்கறிகளின் விலையேற்றமே இதற்குக் காரணம்.
தக்காளி, வெங்காயம், பூண்டு, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை உயர்வால், நடுத்தர வருமானம் பெறும் பெரும்பாலான குடும்பங்கள் காய்கறிகளை வாங்குவதை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதன்காரணமாக மரக்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகள் சமைக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பண்டிகை நாட்களில் மட்டும் அனைத்து வகையான பழங்களையும் வாங்குவதாக தெரிவித்தனர். மற்ற நாட்களில் வாழைப்பழம் வாங்குகிறோம் என்றனர். இதனால் பழங்கள், காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் செலவிடும் மாத பட்ஜெட் ரூ.300ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை உயர்வால், உணவகங்களில் தக்காளி சாஸ் (ப்யூரி) மூலம் உணவு தயாரிக்கப்படுவதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல வெங்காயத்துக்குப் பதிலாக வெள்ளரிக்காயை சாலட்டில் அதிகம் சேர்க்கிறார்கள். மரக்கறிகளின் விலை அதிகரித்த போதிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.