டெல்லி: ‘பிடபிள்யூசி‘ மற்றும் ‘பெர்பியோஸ்‘ ஆகியவற்றின் ஆய்வு நிதி தொழில்நுட்ப சேவைகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தி 30 லட்சம் பேரை ஆய்வு செய்துள்ளது. இதில், இந்தியர்கள் தங்களின் சம்பளத்தில் 39 சதவீதத்தை கடனை திருப்பி செலுத்தவும், காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தவும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. குறைந்த வருமானம் உள்ளவர்கள் வங்கிகள் போன்ற முறையான வழிகளில் இல்லாமல் நண்பர்கள், உறவினர்கள், வட்டி அல்லது அடகுக் கடைகளில் கடன் வாங்குவது தெரியவந்துள்ளது.
தொடக்க நிலை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 35% மாத தவணையாகவும், நீண்ட கால ஊழியர்கள் 40%, நடுத்தர வருமானம் ஈட்டுபவர்கள் 44% மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் 46% தொகையை செலுத்துவதாக தனியார் நிறுவனங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியர்கள் தங்கள் பணத்தில் 39% கட்டாயச் செலவுகளுக்கும், 32% தேவையான செலவுகளுக்கும், 29% விருப்பச் செலவுகளுக்கும் செலவிடுகிறார்கள் என்று நிறுவனங்களின் ஆராய்ச்சி காட்டுகிறது.
கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் காப்பீட்டு பிரீமியங்களை செலுத்துதல் ஆகியவை கட்டாய செலவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. விருப்பச் செலவுகளில் பெரும்பாலானவை, அதாவது 63%, ஆடை மற்றும் அணிகலன்களுக்காக செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 14% ஆன்லைன் கேமிங்கிற்கும், 13% உணவை ஆர்டர் செய்வதற்கும், 3% பொழுதுபோக்கிற்கும், 3% மது அருந்துவதற்கும், 1% பயணத்திற்கும் 3% மற்ற செலவுகளுக்கும் செலவிடப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேவையான செலவுகளுக்கு ஒதுக்கப்படும் தொகையில், 30% குடிநீர் மற்றும் கழிவுநீருக்காக செலவிடப்படுகிறது. இந்தியர்கள் அன்றாடத் தேவைகளுக்கு 18%, வீட்டு வாடகைக்கு 16%, மருந்துகளுக்கு 15%, எரிபொருளுக்கு 10% மற்றும் இதர செலவுகளுக்கு 12% இந்தியர்கள் செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.