இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முக்கியமான முன்னேற்றமாக, புதிய ஏவுகணை போர்க்கப்பல் “ஐ.என்.எஸ். தமால்” ஜூலை 1ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இக்கப்பல், இந்திய கடற்படையின் பலத்தை மேம்படுத்தும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்கப்படுகிறது. இந்த திட்டம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நிலவும் உறவுகளின் வலிமையையும், இரு நாடுகளும் பாதுகாப்புத்துறையில் மேற்கொண்டு வரும் கூட்டணியையும் எடுத்துக்காட்டுகிறது.

ஐ.என்.எஸ். தமால், 3,900 டன் எடையுடன் 125 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து பயன்படுத்தியுள்ள தொழில்நுட்பங்கள், சமுதிரம் மற்றும் நிலத்தில் இருக்கும் குறிகளை வெற்றிகரமாக தாக்கும் திறனை வழங்குகின்றன. குறிப்பாக, பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் 26 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, ‘மெய்க் இன் இந்தியா’ குறிக்கோளை வலுப்படுத்துகிறது.
போர்க்கப்பலுக்கு ‘தமால்’ என பெயரிடப்பட்டு உள்ளது, இது புராணங்களில் உள்ள இந்திரனின் வாளை குறிக்கும். இந்த பெயரிடல், இந்திய மரபு மற்றும் வீரபாவ உணர்வின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் கலினின்கிராட் நகரில் இருந்து கடற்படையில் இணைக்கப்படும் இந்த கப்பல், இந்தியாவின் மேம்பட்ட கடற்படை யுக்திகளுக்கான ஓர் அடையாளமாக விளங்கும். இந்தக் கப்பல், கடந்த இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் எட்டாவது போர்க்கப்பலாகும்.
இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ள இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால், தமால் இந்திய கடற்படையின் வளர்ந்துகொண்டிருக்கும் திறன்களின் வெளிப்பாடாக இருப்பதாகக் கூறினார். பாதுகாப்பு வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கப்பல், தேசிய பாதுகாப்பின் முக்கிய கட்டமாக திகழும். இந்தியாவின் கடற்படை வீரர்களுக்கு இது மேலும் பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கை மிகுந்துள்ளது.