புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (யுபிஎஸ்) அமல்படுத்துமாறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் மாநில அரசுகளை வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மகாராஷ்டிரா அரசு இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாட்டிலேயே முதல் மாநிலமாக மாறியுள்ளது.
2004 மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் பணவீக்க சீரமைப்பு மற்றும் இதர சலுகைகளுடன் ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் பணியாற்றியவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. அடுத்த சில மணி நேரங்களில், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாட்டிலேயே முதல் மாநிலமாக மகாராஷ்டிர அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் கட்சிகள் தங்கள் சொந்த லாபத்துக்காக அரசியலாக்க வேண்டாம் என மத்திய அரசு ஊழியர்களின் உயர்மட்டப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.