ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கிலிருந்து வீடு கட்டுவதற்கும், குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்துவதற்கும், திருமணச் செலவுகளுக்கும் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 2 அல்லது 3 நாட்களில் அவர்களது வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
இந்நிலையில், யுபிஐ மூலம் உடனடியாக பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த பிஎஃப் அமைப்பு திட்டமிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் துறை செயலர் சுமிதா டாவ்ரா நேற்று கூறியதாவது:- பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து உடனடியாக யுபிஐ மூலம் பணத்தை எடுக்க அனுமதிக்க இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகத்திடம் பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும்.

இதன் மூலம், சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை UPI மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும், தகுதியானவர்கள் UPI மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம். இந்த பரிவர்த்தனை தானியங்கி பணப்பட்டுவாடா எனப்படும் சாளரத்தின் கீழ் செய்யப்படும். இந்த வசதியை அனைத்து சந்தாதாரர்களும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
2023-24 நிதியாண்டில் மொத்தம் 90 லட்சம் பேர் தங்களது பிஎஃப் தொகையை திரும்பப் பெற்றுள்ளனர். நடப்பு 2024-25 நிதியாண்டில் இதுவரை 1.9 கோடி பேர் பணம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.