மக்களவையில் நேற்று நிதி மசோதா 2025 மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது, ”பிப்ரவரி, 13-ல், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, வருமான வரி சட்ட திருத்த மசோதா, தேர்வுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் முதல் நாளில், தேர்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே, புதிய வருமான வரி மசோதா, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்,” என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் கூட்டப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 1961-ன் வருமான வரிச் சட்டத்தின் பாதி அளவு.
சட்டத்தில் 5.12 லட்சம் வார்த்தைகளும், புதிய மசோதாவில் 2.6 லட்சம் வார்த்தைகளும் மட்டுமே உள்ளன. 819-க்கு பதிலாக 536 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தியாயங்களின் எண்ணிக்கை 47-லிருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருமான வரி மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன, தற்போதைய சட்டம் 18 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. 1,200 விதிகள் மற்றும் 900 விளக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.