மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களைத் தொடர்ந்து பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடை திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வகுப்பறையில் மாணவர்களிடையே நேர்மறையான சூழலை ஏற்படுத்துவதில் கல்வி அமைச்சர் மதன் திலவர் தீவிரம் காட்டி வருகிறார். இதன் மூலம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் சரியான மதிப்புகள் மற்றும் கலாச்சாரங்களை கற்று அனுபவிக்க முடியும்.
இதை உணர்ந்து அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒரே சீருடை திட்டத்தை அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் உடை அணிந்து பள்ளிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் உடை மாணவர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை மாற்றவே இந்த சீருடை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது,” என்றார். பல ஆசிரியர்கள் தங்கள் உடலை வெளிக்காட்டும் வகையில் ஆடை அணிந்து வருகின்றனர். இது மாணவர்களிடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தாது என கல்வி அமைச்சர் திலவர் பகிரங்கமாக கூறியது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.