பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க வசதியாக, திருநெல்வேலியில் இருந்து வாரணாசிக்கு சென்னை எழும்பூர் வழியாக பிப்., 5-ம் தேதி பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில், ஜன., 13 முதல் பிப்., 26 வரை, 45 நாட்கள் மகா கும்பமேளா நடக்கிறது.
இதில் 43 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. அதன் விவரம்: இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து பிப்., 5-ம் தேதி புறப்படும். சுற்றுலா பயணம் பிப்.13-ல் முடிவடைகிறது.
வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்திக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், விழுப்புரம், தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் விஜயவாடா வழியாக செல்கிறது. எகானமி வகுப்புக்கான கட்டணம் ரூ. 26,850 மற்றும் நிலையான வகுப்பிற்கு ரூ. 38,470-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு, 9003140680, 8287931977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.