பெங்களூரு: புவியை கண்காணிக்கும் வகையில் அதிநவீன EOS-08 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி ஆகஸ்ட் 16ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து EOS-08 செயற்கைகோளை சுமந்து கொண்டு SSLV T-3 ராக்கெட் காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட தொலை உணர்திறன் பயன்பாடுகளுக்கான செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது புவி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ள EOS-08 வரும் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. 176 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
இரவு நேரத்திலும் துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதன் ஆயுட்காலம் ஒரு வருடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.