இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத், அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு புதிய தலைவராக வி. நாராயணனை தேர்ந்தெடுத்தது. அவர் பொங்கல் பண்டிகை நாளான ஜனவரி 14ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
வி. நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மையத்தின் (எல்பிஎஸ்சி) இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்ற அவர், 1984ல் இஸ்ரோவில் இணைந்தார்.
40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிரபல விஞ்ஞானியான அவர், ராக்கெட் மற்றும் விண்கல திரவ உந்து விசை துறையில் சிறப்பாக பணி ஆற்றியவர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் தனது தொடக்க கால பணியில் திட உந்துவிசை துறையில் முக்கிய பங்களிப்பு செய்தார்.
அவர் பங்காற்றிய முக்கிய திட்டங்களில் பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1, ஜிஎஸ்எல்வி மாக்-3 ஏவுகணைக்கான சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின், சந்திரயான் 2, சந்திரயான் 3 உள்ளிட்டவை அடங்கும்.