திருமலை: லட்டு பிரசாதம் பிரச்னையால், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து, சிறப்பு பிரயாசித்த பூஜை நடத்த, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் இன்று மாலை, திருப்பதி வருகிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் விவகாரம் தொடர்பாக ஐஜி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்டு பிரச்சனைக்காக துணை முதல்வர் பவன் கல்யாண் தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
வரும் 30-ம் தேதி விரதத்தை முடித்துக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளார். இதனிடையே, லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதாயம் தேடுவதாகக் கூறி, மாநிலம் முழுவதும் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து திருமலையில் சிறப்பு வழிபாடு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இதை முன்னிட்டு ஜெகன்மோகன் இன்று மாலை விமானம் மூலம் திருப்பதி வருகிறார்.
இந்நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை திருப்பதி முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக தெலுங்கு தேசம், பாஜக, இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
மேலும், ஜெகன்மோகன் ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல விரும்பினால், தேவஸ்தானப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும், அவருக்கு இந்து மதத்தில் உண்மையான நம்பிக்கை இருந்தால், அவர் கபிலதீர்த்தத்தில் மொட்டையடித்து, நாமம் செய்துவிட்டு திருமலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் திருமலைக்கு செல்லும்போது இடையூறு செய்வோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜெகன்மோகன் வருகையை முன்னிட்டு திருப்பதியில் கூட்டம் நடத்தவும், சாலைகளில் கூடுவதற்கும் தடை விதித்து எஸ்பி சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.