நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. 80வது பொதுச் சபைக் கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: “நவீன உலகில் இந்தியாவின் அணுகுமுறையை வழிநடத்தும் மூன்று முக்கியக் கொள்கைகள் தன்னிறைவு, தற்காப்பு, தன்னம்பிக்கை ஆகும். எங்கள் நாட்டின் திறன்களை வளர்க்கவும், வலிமையை உருவாக்கவும், திறமைகளை காக்கவும் ஆத்மநிர்பர் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இதன் விளைவுகளை உற்பத்தி, விண்வெளி, மருந்து, டிஜிட்டல் துறைகளில் ஏற்கனவே காண முடிகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை, எல்லைப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எங்கள் முன்னுரிமைகளில் அடங்கும். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளரும் பொருளாதாரமாகவும், இந்தியா தன்னம்பிக்கையுடன் நிற்கிறது.
இந்தியா எப்போதும் தனது தேசிய நலன்களை கருத்தில் கொண்டு சுதந்திரமாக முடிவெடுக்கும். வளரும் நாடுகளின் குரலாக ஒலிக்கும் இந்தியா, போர்களை நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும். அதேசமயம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மறுசீரமைப்பு அவசியம். நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டும். இந்தியா அதிக பொறுப்புகளை ஏற்கத் தயாராக உள்ளது” என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் குறித்து பெயரை சொல்லாமல் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் உலகிற்கு ஆபத்து என ஜெய்சங்கர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த இந்திய தூதர் ரேந்தலா ஸ்ரீநிவாஸ், “இந்தியா பெயரே சொல்லாத போதிலும், பாகிஸ்தான் தானாகவே பதிலளித்தது. இது எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை ஒப்புக்கொண்டதற்கு சமம்” எனக் கூறினார்.