புது டெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாவை சேதப்படுத்தவும், வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கவும் நோக்கம் கொண்ட ஒரு கொடூரமான சதித்திட்டமாகும். இந்தக் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரு முன்மாதிரியான பதில் தேவைப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள பஹாவல்பூர் மற்றும் முரிட்கே உள்ளிட்ட இடங்களில் உள்ள பயங்கரவாத கட்டளை மையங்களை அழிப்பதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், வளர்ப்பவர்கள் மற்றும் தங்கள் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். எடுக்கப்பட்ட எந்த முடிவுகளும் இந்தியாவின் தேசிய நலனுக்காகவே எடுக்கப்படுகின்றன, தொடர்ந்து எடுக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நமது உரிமை குறித்து மற்ற நாடுகளிடமிருந்து புரிதலைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நமது வளங்கள் குறைவாக இருக்கலாம், ஆனால் இந்தியா பரந்த மனப்பான்மை கொண்டது. உலக நாடுகள் தங்களுக்குள் கலாச்சாரம் மற்றும் மரபுகளுக்கு அதிக மரியாதை காட்ட வேண்டும்.
சுமார் 200 “சர்வதேச நாடுகளின் சமூகத்தில், நமக்கு தேசிய நலன்கள் உள்ளன. இயற்கையாகவே நாம் அவற்றை முன்னேற்ற முயல்கிறோம். ஆனால் இது பரஸ்பர புரிதல் மற்றும் பரஸ்பர நன்மைக்கு வழிகாட்டும் கொள்கைகளுடன் செய்யப்பட வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.