இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க தன்னுடைய முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தனது பிரபலமான ஜாவா 350 பைக்கின் சிறப்பு பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘ஜாவா 350 லீகசி எடிசன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாடல், வெறும் 500 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு போன்ற கிளாசிக் பைக்குகளுக்கு நேரடி போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள ஜாவா 350, கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. அதன் விற்பனை ஒரு வருடத்தை கடந்ததை நினைவுகூரும் வகையில், இது ஒரு லிமிடெட் எடிசன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் சில பிரத்யேக அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பைக்கின் தோற்றத்தில் சிறிய மாற்றங்களுடன், பயணிகளுக்கு அதிகமான வசதிகளை வழங்கும் விதமாக டூரிங் விஸர் சேர்க்கப்பட்டுள்ளது. இது எதிர்காற்றை தடுத்து முகத்தில் தூசி படிவதை தடுக்கும். அதே நேரத்தில், பின்புறம் அமர்பவர்களின் வசதிக்காக பில்லன் பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அம்சமாக கிராஷ் கார்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது விபத்து நேரத்தில் பைக்கிற்கு அதிக சேதம் ஏற்படாமல் தடுக்கும்.
இந்த சிறப்பு பதிப்பில் லெதர் கீ செயின் மற்றும் சிறிய பைக் மாடல் பொம்மையும் வழங்கப்படுகின்றன. என்ஜின் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல், அதே 350சிசி லிக்விட்-கூல்டு என்ஜின் தொடருகிறது. இது அதிகபட்சமாக 22.5 பிஎஸ் பவரையும், 28.1 என்.எம் டார்க்கையும் உருவாக்கக்கூடியதாக இருக்கும். மென்மையான கியர் மாற்றத்திற்காக அசிஸ்ட் & ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.
புதிய ஜாவா 350 லீகசி எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,98,950 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கப்போகிறது என்பதால், விரைவாக முன்பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் ஜாவா பைக்குகளின் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்த லிமிடெட் எடிசன் மாடல் இன்னும் அதிகமான மோட்டார்சைக்கிள் பிரியர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.