கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் பிரபலமான ஜீப் சவாரி மற்றும் சாகச பயணங்களுக்கு இன்று (ஜூலை 16) முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடந்த விபத்துகளால் உயிர் சேதங்கள் ஏற்பட்டதைக் காரணமாக்கி, ஜூலை 5 அன்று கலெக்டர் விக்னேஸ்வரி இந்த பயணங்களுக்கு தற்காலிக தடை உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு வலுப்பெற்றதை தொடர்ந்து, தற்போது கட்டுப்பாடுகளுடன் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, தேவிகுளம் மற்றும் இடுக்கி சப் டிவிஷனுக்குட்பட்ட ஒன்பது முக்கிய வழித்தடங்களில் ஜீப் சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கேரளா அட்வஞ்சர் டூரிசம் புரமோஷன் சொசைட்டியின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும். இத்திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பை மேம்படுத்த, சப் கலெக்டர் தலைமையில் போக்குவரத்து, காவல்துறை, ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மாவட்ட சுற்றுலா துறையில் பதிவு செய்யப்பட வேண்டும். டிரைவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும். அவர்கள் மருத்துவ சான்றிதழும், போலீஸ் சான்றும், வாகனத்திற்கான உரிய அனுமதி, வேக கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் பயணிகளுக்கான சீட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அவசியம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படும். விதிமீறல் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பருவமழையால் ஏற்பட்ட சேதமும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 147 வீடுகள் பாகமாய் சேதமடைந்துள்ளன, மேலும் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்களில் ஏலம், காபி, வாழை உள்ளிட்ட பயிர்கள் 1173 ஹெக்டேரில் சேதமடைந்தன. மழையளவு கடந்த ஆண்டைவிட 34% குறைவாக பதிவாகி உள்ளதால், இயற்கை சீற்றத்துடனும், சுற்றுலா ஒழுங்குமுறையுடனும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.