ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்ற ‘2047ம் ஆண்டில் நீர் வளமான நாடாக இந்தியா’ என்ற தலைப்பில் இரண்டாவது ஆண்டு நீர்வள அமைச்சர்களின் மாநாட்டில், கர்நாடகாவின் துணை முதல்வரும், நீர்பாசன அமைச்சர் சிவகுமார், மத்திய அரசிடம் மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு தடையின்றி தண்ணீர் வழங்குவதற்கும், பெங்களூரின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவும், 400 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யவும் மேகதாது அணை திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு இருப்பினும், அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
மேலும், 2023-2024 பட்ஜெட்டில் பத்ரா மேலணை திட்டத்திற்காக 5,300 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், அந்த நிதி இன்றும் விடுவிக்கப்படாததை ஏற்கனவே கேட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கிருஷ்ணா நதிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், 2011ஆம் ஆண்டின் தீர்ப்பில் சில மாற்றங்களைச் செய்யவும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுத்தமான குடிநீர் மற்றும் நீர் வளங்களை பாதுகாப்பது அவசியமாக உள்ளதாகவும், காலநிலை மாற்றம் மற்றும் நீர் மாசுபாட்டை எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்றார். நீர்பாசன திட்டங்களை மேம்படுத்தவும், நீர் வினியோகத்தை கட்டுப்படுத்தவும் கர்நாடகா பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.