பெங்களூரு மாவட்டத்தை சேர்ந்த ஒரு அரசு பள்ளி ஆசிரியர் சைபர் மோசடியின் பலியாகியுள்ளார். கனகபுரா தாலுகாவில் பணிபுரியும் மகாதேவசாமி என்ற ஆசிரியருக்கு சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து வாட்ஸ்அப் வழியாக ஒரு செய்தி வந்தது. அதில், எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து பேசுகிறோம், உங்கள் கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என கூறி, ஒரு செயலியை நிறுவுமாறு கேட்டுக் கொண்டனர்.

மகாதேவசாமி அதை நம்பி செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட்டார். வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிய சில வினாடிகளில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.1.91 லட்சம் பணம் எடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கியை தொடர்பு கொண்டார், பின்னர் பெங்களூரு தெற்கு சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். வங்கிகள் அல்லது அரசுத் துறைகள் எவரிடமும் கடவுச்சொல், ஏடிஎம் எண் போன்ற விவரங்களை கேட்டுத் தொடர்பு கொள்ளாது என்பதும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய சைபர் குற்றங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்துகிறது. வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்புகள், செயலிகள், அல்லது பரிசு வாக்குறுதிகள் எதையும் திறக்கும்முன் அவை நம்பகமானவையா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர்.