கொச்சி: ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் இன்று (செப்டம்பர் 10) விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக கேரள அரசை கடுமையாக சாடியது.
“ஹேமா கமிட்டி அறிக்கை 2021-ல் காவல்துறைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசின் இந்த செயலற்ற தன்மை அதிர்ச்சி அளிக்கிறது.
ஹேமா அறிக்கை இத்தகைய பிரச்சனை இருப்பதை வெளிப்படுத்திய பிறகு, இது தொடர்பாக அரசு எடுத்த குறைந்தபட்ச நடவடிக்கை என்ன? திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் பெண்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க என்ன செய்தீர்கள்?
பெண்கள் அதிகம் வசிக்கும் நம்மைப் போன்ற மாநிலத்தில் இத்தகைய நிலை கவலையளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என நீதிமன்றம் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு தரப்பில், ஹேமா கமிட்டி அறிக்கையை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நீதிபதிகள், “ஹேமா கமிட்டியின் திருத்தப்படாத முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என உத்தரவிட்டார்.