கொல்கத்தா: கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உத்தரவு ஜுனியர் மருத்துவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ந் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
மாநிலத்தை உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
அதேநேரம் மேற்கு வங்காளத்தில் வாரக்கணக்கில் ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என ஜுனியர் டாக்டர்கள் போராடினர். இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சியல்டா மாவட்ட நீதிமன்றம் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது.
தொடர்ந்து சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சஞ்சய் ராய்க்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து சியல்டா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.17 லட்சம் வழங்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆயுள் தண்டனை உத்தரவு ஜுனியர் மருத்துவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றம் நீதியை கேலி செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அவர்கள் சீல்டா நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.