மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயது இளம்பெண் திவ்யா பபோனி. மகா கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் செல்ல விரும்பினார். இந்தியர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதால், லிப்டில் ஏறி பிரயாக்ராஜ் செல்ல முடிவு செய்தார். ‘லிப்ட்’ என்று எழுதப்பட்ட பேனரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு கடந்த 12-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்டார்.
பைக், ஸ்கூட்டர், கார், லாரி என அனைத்து வாகனங்களையும் வழி மறித்தார். மும்பையிலிருந்து தானே வழியாக நாக்பூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு பல வாகனங்களில் லிப்ட் மூலம் 1,500 கி.மீ தூரத்தை எளிதாகக் கடந்தார். ஜபல்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை லாரிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவரது லிப்ட் பயணம் சற்று கடினமாக இருந்தது. இருப்பினும், உள்ளூர்வாசிகளின் உதவியுடன், அவர் லிப்ட் மூலம் 2 நாட்களில் மும்பையிலிருந்து பிரயாக்ராஜை அடைந்தார்.

அவர் தனது பயண அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். என்னுடைய அனுபவம் ஆச்சரியமாக இருந்தது. மும்பையிலிருந்து பிரயாக்ராஜுக்கு லிப்ட் மூலம் தயக்கமின்றி பயணிக்க பலர் அவருக்கு உதவினார்கள். இந்தியர்களின் கருணையும் அற்புதமான ஒற்றுமையும்தான் நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்று தனது பயணம் குறித்து பெருமையுடன் குறிப்பிட்டார். இந்தப் பதிவை இதுவரை 36,000-க்கும் அதிகமானோர் விரும்பியுள்ளனர்.