சென்னை: சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு, சென்னை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மாநில துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், சென்னை மாவட்டத் தலைவர்கள் சிவராஜசேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதையடுத்து, கே.வீ. தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளோம். அம்பேத்கரை பொய்யாக விமர்சித்ததை கண்டித்து இந்த போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தியுள்ளோம்.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தை பிரதமர் மோடி உண்மையாக மதித்து, சட்டத்தின் ஆட்சி நடந்தால், அமித்ஷாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நேற்று நாடு முழுவதும் மனு அளித்துள்ளது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் பல போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு தங்கபாலு கூறினார்.