புதுடில்லி: கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக உணர்கின்றனர் என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “ஒரு நாட்டின் தூதருக்கே பாதுகாப்பு தேவைப்படும் நிலை ஏற்பட்டிருக்கும் போது, சாதாரண இந்தியர்களின் நிலைமையை நீங்கள் ஊகிக்கலாம்” என்றார். இதன் மூலம் கனடாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை குறித்த அவரது கவலை வெளிப்பட்டது.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை கனடா அரசு தீவிரப்படுத்தி வருகிறது. 2019ம் ஆண்டில் 625 இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,997 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,837 இந்தியர்கள் வெளியேற்றப் பட்டியலில் உள்ளதாகவும், இதனால் இந்தியர்கள் மீதான எதிர்மறை மனப்பான்மை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு அடுத்ததாக மெக்சிகோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களும் இதேபோன்று வெளியேற்றப்பட உள்ளனர்.
தூதர் தினேஷ் பட்நாயக் மேலும் கூறியதாவது, “இந்தியர்களை பிரச்னையாக கனடா அரசு பார்க்கக்கூடாது. பிரச்னை இந்தியர்களில் அல்ல, சில தீவிரவாதக் குழுக்களிடமே உள்ளது. அவர்கள் இரு நாடுகளுக்கிடையேயான உறவைப் பிணைக்கைதியாக வைத்துள்ளனர். இதை சமாளிப்பது கனடா அரசின் பொறுப்பு” என்றார். அவர் கூறிய இந்த கருத்துகள், கனடா-இந்தியா உறவில் நிலவும் நெருக்கடியை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான முந்தைய அரசின் காலத்தில் இரு நாடுகளுக்கிடையேயான உறவு பாதிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுந்தபோது, தூதர், “ஒரு நபரால் எந்த உறவையும் கெடுக்க முடியாது; சூழ்நிலையே முக்கியம்” என தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கங்கள் உறவை சீரமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கனடாவில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பு குறைவு உணர்வில் வாழ்வது தொடர்வதால், தூதரின் கருத்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.