
உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில், ஹிமாலயன் பரப்பில் உள்ள முக்கிய புனித யாத்திரை இடமாகும். இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் நிலையில், நேற்று காலை யாத்திரை பாதையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் பெரும் அச்சம் நிலவியது.

ஜங்கிள்சட்டி காட் பகுதியில் காலை 11 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருண்டு வந்த பாறைகள் பக்தர்கள் மற்றும் டோலி தூக்கும் தொழிலாளர்கள் மீது விழுந்தன. இந்த சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்த நிதின் குமார் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த மூவரில் ஒருவராக பாவ் நகரைச் சேர்ந்த ஆகாஷ் சைத்ரியா உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலச்சரிவால் பள்ளத்தாக்கில் விழுந்தவர்களை மீட்பதற்காக போலீசார், உள்ளூர் மக்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து முயற்சி மேற்கொண்டனர். கயிறு மூலம் ஐந்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன. பக்தர்கள் மற்றும் யாத்திரையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இயற்கை விபத்து சார்தாம் யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்ளும் பக்தர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.