அசாம்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புளேர்டலில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் தனது எக்ஸ் பதிவில், “அஸ்ஸாம் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அதீத பேரழிவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவினாஷ் என்ற 8 வயது சிறுவன் உட்பட பல குழந்தைகள் எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அஸ்ஸாம் வெள்ளத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர், 53,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், 24,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தனர். “வெள்ளம் இல்லாத அசாம்” என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சியின் தவறான நிர்வாகத்தை இந்த எண்கள் பிரதிபலிக்கின்றன.
அஸ்ஸாமுக்கு ஒரு விரிவான மற்றும் இரக்கமுள்ள பார்வை தேவை. வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணையம் உரிய நிவாரணம், மறுவாழ்வு, குறுகிய காலத்தில் இழப்பீடு மற்றும் நீண்ட கால வெள்ளத்தை கட்டுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.
நான் அசாம் மக்களுடன் நிற்கிறேன். நான் பாராளுமன்றத்தில் அவர்களின் சிப்பாயாக இருப்பேன். மத்திய அரசு மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும், ஆதரவையும் விரைவில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.