சென்னை: தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டும், தங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் தாங்களே பேசிக்கொண்டும் வாழ்வைக் கழிப்பது சிலருக்குப் பிடித்தமான விஷயங்கள். அப்படி நடந்து கொள்வதையே ‘தன்னடக்கம்’ ‘தாழ்மை’ ‘பணிவு’ என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். அவர்களை வீழ்த்துவதற்கு யாரும் தேவை இல்லை. தங்களைத் தாங்களே அவர்கள் வீழ்த்திக் கொள்வார்கள். தன்னடக்கம் என்பது வேறு; தாழ்வு மனப்பான்மை என்பது வேறு. தன்னடக்கம் தலைகுனியாது; தாழ்ச்சி அடையாது. அது நிமிர்ந்து நிற்கும். உண்மையை உரக்கச் சொல்லும்.
ஆனால் தாழ்வு மனப்பான்மை, உங்கள் வாழ்வை தரைமட்டமாக்கிவிடும். குட்டக் குட்டக் குனிந்தால், உங்கள் முதுகின்மேல் நாலுபேர் ஏறி உட்கார்ந்து கொண்டு குட்டுவார்கள். நீங்கள் குனிந்தபடியே வாழப் பழகிவிட்டால், அதன்பின் உங்கள் கூன்முதுகை நிமிர்த்த எந்த வைத்தியராலும் முடியாது. ‘தற்பெருமை கொள்ளாதே; அடங்கி இருக்கக் கற்றுக்கொள்’ என்று உங்களைப் பார்த்துச் சொல்பவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை வளரவிட மாட்டார்கள்.
சுயமாகச் சிந்தியுங்கள். சுதந்திரமாக வாழுங்கள். உங்களை முதலில் நீங்கள் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலை எண்ணிப் பெருமை கொள்ளுங்கள். தன்பெருமை என்பதுதானே தற்பெருமை. ஒருவன் தன் பெருமைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வது தற்பெருமையாயின் அதில் என்ன தவறு. நம்முடைய தனித்துவத்தை பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்த முனையும்போதுதான், அதை வளப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் நாம் பெற முடியும்.
நன்றாக வாழ்வதற்காகத்தான் இந்த வாழ்க்கையை நாம் பெற்றிருக்கிறோம். உலகில் வெற்றியாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லாம் எப்படி வெற்றி பெற்றார்கள்? தங்கள் உள்ளாற்றலை அவர்கள் உணர்ந்தார்கள்; இந்த உலகிற்கு உணர்த்தினார்கள். தாங்கள் தனிச்சிறப்பு மிக்கவர்கள் என்பதில் பெருமிதம் கொண்டார்கள். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் தங்கள் வழியில் சென்றார்கள்; வெற்றி கண்டார்கள். தம்மை உணர்ந்து தெளிந்தவர்கள் மகான்கள். இதுவரை எப்படியோ! இனியாவது உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக திகழும்.