பீகார் மாநிலம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலில், அனைத்து கட்சிகளும் தங்களது வெற்றிக்காக ஆவலுடன் பிரசாரம் செய்து வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. 243 தொகுதிகளில் பெரும்பான்மை பெற, குறைந்தது 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
2020 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இம்முறை தேர்தல் முன் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் மூலம் புதிய அதிர்ச்சி நிலை உருவாகியுள்ளது. தேர்தல் ஆணையம் இதனைச் சரிசெய்து இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் ரகோபூரில் உரையாற்றியபோது, “நான் இங்கு போட்டியிட வேண்டுமா என்பது மக்களின் முடிவாகும். மக்கள் என்னை நம்பினால், நான் நிற்பேன். இல்லையெனில் வேறு யாரோ போட்டியிடட்டும்,” எனத் தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கடுமையாக விமர்சித்தார்.
“இன்றைய அரசியல் யுத்தம் இருக்கை பகிர்வுக்காக அல்ல, ஊழலின் பகிர்வுக்காகவே நடைபெறுகிறது. யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள் என்ற கணக்கில்தான் அரசியல் திசை திரும்பியுள்ளது,” என்று அவர் கூறினார். மக்கள் தங்களது வாக்குகளை பணம், சாதி, மதம் போன்றவற்றுக்காக விற்கும் நிலைமை குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார்.
“மீண்டும் அவ்வாறான வாக்கு விற்பனை நடந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகள் அதே ஊழல்வாதிகளின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பின்னர் குறை கூறாதீர்கள்,” என்று பிரசாந்த் கிஷோர் எச்சரித்தார். மேலும், “நீங்கள் மாற்றத்தை விரும்பினால், அதற்காக துணிவாக நிற்க வேண்டும். இல்லையெனில், பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்,” என உறுதியாகக் கூறினார்.
பீகார் தேர்தலின் வெற்றி யார் பக்கம் சாயும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோரின் எச்சரிக்கை பீகார் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மக்களின் வாக்கு ஒரு பொறுப்பு என்பதை உணர்த்தும் முயற்சியாகவும் அவரது பேச்சு அமையியுள்ளது.