பெங்களூரு: ரசிகரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் தர்ஷன் வியாழக்கிழமை காலை பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
பெங்களூரு சிறையில் அவருக்கு ஆடம்பர வசதிகள் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டிய பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமைக் கண்காணிப்பாளர் உள்பட 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், கர்நாடக காவல்துறையால் மூன்று விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதியை மீறியதாக தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன், நாற்காலியில் காபி கோப்பையுடன் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருந்த படங்கள் வெளியாகின.
இதையடுத்து அவர் வீடியோ அழைப்பில் பேசிய படங்களும் வெளியாகின. இந்நிலையில், ரசிகை கொலை வழக்கில் தொடர்புடைய தர்ஷன் உள்பட 17 பேர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முக்கிய குற்றவாளியான தர்ஷன் வியாழக்கிழமை காலை பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கில் கைதான பவித்ரா கவுடா, அனுகுமார், தீபக் ஆகியோர் மட்டுமே தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளங்களில் அவமானப்படுத்திய ரசிகை ரேணுகா சுவாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர் மற்றும் பவுன்சர்கள் கைது செய்யப்பட்டனர்.