போபால்: மத்திய பிரதேசத்தின் மந்தசௌர் மாவட்டத்தில் உள்ள காந்திசாகர் வனப்பகுதியில் நடைபெற்ற சுற்றுலா நிகழ்வில், வெப்ப காற்று பலூனில் ஏற்பட்ட தீ விபத்தில் முதல்வர் மோகன் யாதவ் உயிர்தப்பினார்.
சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் காந்திசாகர் பகுதிக்கு வந்திருந்த முதல்வர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட வெப்ப காற்று பலூனில் ஏறினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் பலூன் நிலை தடுமாற, சில நொடிகளில் தீப்பிடித்தது. பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு, முதல்வரை பாதுகாப்பாக கீழிறக்கியனர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பகுதி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியின் பகுதியாக தான் பலூனில் ஏறியதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார். மேலும், காந்திசாகரை மத்திய பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய முதல்வருக்கு அரசியல் வட்டாரங்களிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.