பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மற்றும் மூத்த அரசியல்வாதி மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு அவர் மூச்சுத்திணறல் காரணமாக அவசரமாக பெங்களூருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை தீவிர கண்காணிப்பில் வைத்தனர். தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள், கார்கேவின் உடல்நிலை சீராகும் வரை அவர் மருத்துவமனையிலேயே வைத்துக் கண்காணிக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர். அவரைச் சந்தித்த கட்சியின் மூத்த தலைவர்கள், விரைவில் அவர் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தலைமைத்துவத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகார்ஜூன கார்கே தற்போது நிலைமையிலிருந்து மீண்டு வருவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை மருத்துவமனை விரைவில் வெளியிடவுள்ளது.