புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் கின்னர் அகடாவில் இணைந்த நடிகை மம்தா குல்கர்னிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மம்தாவுக்கு பாதாள உலக தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், தற்போது அவருக்கு திருநங்கை அகடா என்ற கின்னர் அகடாவில் மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி.
1990-களில் பிரபல நடிகையாக இருந்த இவர், சினிமா துறையை விட்டு விலகி துபாயில் வசித்து வந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய பிறகு, பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சந்நியாசம் செய்தார். திருநங்கை அகடா என்ற கின்னர் அகடாவில் அவருக்கு மகா மண்டலேஷ்வர் பதவியும் வழங்கப்பட்டது. இதற்கான சடங்குகள் அகடாவின் தலைவர் மகரிஷி ஆச்சார்யா டாக்டர் லட்சுமி நாராயண் திரிபாதி முன்னிலையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது.

இதற்கு கின்னர அகடாவைச் சேர்ந்த திருநங்கையும் மகா மண்டலேஷ்வரருமான ஹிமான்ஷி சாக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மகா மண்டலேஷ்வர் ஹிமான்ஷி சக்கி கிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மம்தாவுக்கு பாதாள உலக தாதாக்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவர் தனது கணவருடன் போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும் ஈடுபட்டுள்ளார். இதற்காக இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற தகவல்களை சரியாக விசாரிக்காமல் அவளுக்கு மகா மண்டலேஷ்வர் பதவி வழங்கப்பட்டது.
மேலும், திருநங்கைகளுக்கான எங்கள் கின்னர அகடாவில் பெண்ணான இவரை ஏன் சேர்த்தோம்? கின்னர அகடாவின் பெயரை மாற்றலாம்” என்றார். இதை அவள் விமர்சித்தாள். துறவறத்திற்கு முறையான பயிற்சி எதுவும் வழங்காமல், தன்னை மகா மண்டலேஷ்வராக்கியது தவறு என்றும் ஹிமான்ஷி புகார் கூறினார். தனது எதிர்ப்பை வலுப்படுத்த, கின்னர அகடாவின் மற்ற துறவிகளின் ஆதரவையும் திரட்டி வருகிறார். இதனால் பாலிவுட்டில் இருந்து ராஜினாமா செய்த முதல் நடிகை மம்தாவின் மகா மண்டலேஷ்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பதவிக்குப் பிறகு மம்தா குல்கர்னியின் பெயர் ஷ்யாமாய் மம்தானந்த் கிரி என மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.