பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மூவர் படுகாயம் அடைந்தனர். பின்னர் தாக்குதள் செய்தவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில், “மான்செஸ்டரில் நடந்த இந்த தாக்குதல் மனிதாபிமானத்துக்கு எதிரானது. தீய சக்திகளுக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமை தேவை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தில் அவர்களுடன் நாங்கள் உள்ளோம்” என தெரிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது இரங்கலில், “மான்செஸ்டர் தாக்குதல் கொடூரமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிக்க வலிமையும் ஒற்றுமையும் மட்டுமே வழி” என தெரிவித்துள்ளார். அதேசமயம் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “இது யூத சமூகத்தை குறிவைத்து நடந்த தாக்குதல். நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு இடமில்லை” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த தாக்குதல் உலக நாடுகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு மணி அடித்துள்ளது. இந்தியா பல தசாப்தங்களாக பயங்கரவாதத்துடன் போராடி வருகிறது. அதேசமயம் பிரிட்டனும் தற்போது இந்த சவாலை எதிர்கொள்கிறது. மனித குலத்தின் அமைதியை குலைக்கும் தீய சக்திகளை முறியடிக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது.