கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற அமர்வில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு தனது சொந்த வாகனத்தில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து, கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளுமூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக்குழி என்ற கிராமத்தில் கொட்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்ததை தொடர்ந்து, தனது வாகனம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று குறித்த மனுவில் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரரின் வாகனம் விதிமுறைகளை மீறி மருத்துவக் கழிவுகளை கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து கொட்டியுள்ளதால், அந்த வாகனத்தை திருப்பித் தர முடியாது என்று வாதிட்டார். மேலும், இதுபோன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைத்தால், மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது என்றும், உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட அதிகாரம் உள்ளதையும் தெரிவித்தார். வழக்கை பரிசீலித்த நீதிபதி, மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்கான பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பதோடு, குறிப்பாக 75 கிலோமீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகளை கொண்டு செல்லக்கூடாது என்றும், அவற்றை 48 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பின்பற்றாமல், தமிழகத்திற்குள் மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியிருப்பது மிகவும் தீவிரமான குற்றச்செயலாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், உள்ளாட்சி சட்ட விதிகள் படி மருத்துவக் கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கான அதிகாரம் உள்ளதையும், ஆனால் இதனை சரியாக அமல்படுத்துவோர் இல்லை என்றும் கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி துறை செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிலாளர்களாக சேர்த்தது. மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க உரிய வழிகாட்டுதல்கள் உருவாக்க வேண்டிய தேவையை நீதிமன்றம் வலியுறுத்தியது. மருத்துவக் கழிவுகளை சட்ட விரோதமாக கொண்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்கள் அந்தந்த துறை செயலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மனுதாரரின் வாகனத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து, அந்த வாகனத்தை ஏலத்தில் விட உத்தரவிடப்பட்டுள்ளது.