பிரபல நிறுவனமான எல் அண்ட் டி, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் செயல்படும் நிறுவனம், இப்போது தனது பணியாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன், தனது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம், எல் அண்ட் டி நிறுவனத்தில் பணியாற்றும் 60,000 ஊழியர்களில் 5,000 பெண்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த விடுமுறை முதற்கட்டமாக இன்ஜினியரிங் மற்றும் கட்டுமான துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு பொருந்தும் என்றும், விரைவில் இது முழுமையாக நடைமுறைக்கு வரும் என எல் அண்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, சுப்ரமணியன் சமீபத்தில் கூறிய வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கு பிறகு வெளியிடப்பட்டது. மகளிர் தினத்தின் பெருமையிலும், சமூகத்தில் பெண்களுக்கு உரிய கவுரவம் வழங்குவதற்கான முயற்சியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.