புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், அமைச்சர் லட்சுமி நாராயணன், அமெரிக்காவில் உள்ள இந்திய நண்பர்களை சந்தித்து ஆலோ சனையில் பங்கேற்றார். இந்திய துாதர் பினாய் ஸ்ரீகாந்த் பிரதான் மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் துணை துாதர் வருண் ஜெப் ஆகியோரின் அழைப்பின் பேரில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அங்கு சென்றார்.
நியூயார்க் நகரில் உள்ள இந்திய துாதுவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. புதுச்சேரி சர்க்யூட் சட்டத்தை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், புதுச்சேரி அரசுடன் அமெரிக்க இந்திய தூதரகம் இணைந்து செயல்படும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா தொழில்முனைவோர், ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா நடத்துபவர்களுடன் வீடியோ மூலம் முதற்கட்டமாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரியில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கட்டமைப்புகள், மேம்பாட்டு முதலீடுகள் என பல்வேறு நிலைகளில் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.