பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் பயணத்தை முடித்தவுடன், அவர் தென் அமெரிக்காவிற்கு பயணித்தார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், மோடி தனது உரையில் வளரும் நாடுகளின் உரிமை, பிரதிநிதித்துவம் மற்றும் உலக அமைப்புகளில் அவர்களின் பங்கு குறித்துத் தீவிரமாக பேசினார்.
மோடி கூறியதாவது, “வளரும் நாடுகள் இல்லாத உலக அமைப்புகள், சிம் இல்லாத மொபைல் போன்களைப் போன்றவை. இந்த நாடுகள் உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், ஐ.நா., உலக வர்த்தக அமைப்பு, பாதுகாப்பு கவுன்சில் போன்ற அமைப்புகளில் அவர்களுக்கு தீர்மானிக்கும் அதிகாரம் இல்லை. இது வெறும் பிரதிநிதித்துவப் பிரச்சினை மட்டுமல்ல, செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.”

அத்துடன், உலக அமைப்புகள் 21ம் நூற்றாண்டிற்கேற்ப சீர்திருத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழில்நுட்பம் வாரம் வாரமாக வளர்ச்சியடைந்தாலும், உலக அமைப்புகள் பல தசாப்தங்களாக மாற்றமின்றி தொடர்வது ஏற்க முடியாதது என அவர் சுட்டிக்காட்டினார். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, சர்வதேச மக்களின் நலனுக்காக செயல் படவேண்டிய அவசியத்தை இந்நிலையில் அவர் வலியுறுத்தினார்.
மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி பல பிரிக்ஸ் தலைவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றி பேசினார். எனினும், இந்த உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெறும் போதிலும், அதன் எதிர்காலத்தை வடிவமைக்க வளரும் நாடுகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்தார்.