புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, ரூ.3,880 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசி மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நகரின் கல்வி மற்றும் சுகாதார வசதிகள் அதிகரித்துள்ளன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாரணாசி மட்டுமின்றி பூர்வாஞ்சல் பகுதி முழுவதும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையுடன் மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் அயராது உழைத்து வருகின்றன. லக்ஷாதிபதி சூத் யோஜனா மூலம் பூர்வாஞ்சல் பெண்கள் முழு பலன்களைப் பெறுகிறார்கள். விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் பகுதியில் பால் உற்பத்தி 65 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்படுகிறது.

ஒரு காலத்தில், பூர்வாஞ்சல் பகுதி மக்கள் உயர் சிகிச்சைக்காக டெல்லி மற்றும் மும்பை செல்ல வேண்டியிருந்தது. இப்போது வாரணாசி நாட்டின் சுகாதார தலைநகரமாக உருவெடுத்துள்ளது. அனைத்து மேம்பட்ட சிகிச்சைகளையும் இங்கே பெறலாம். ஒரு காலத்தில் ஏழை, எளிய மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வீடு, நிலங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது சிகிச்சைக்காக யாரும் நிலத்தை விற்க வேண்டியதில்லை. மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர்.
இதன் காரணமாக தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாரணாசியின் வளர்ச்சியை கண்டு வியப்படைகின்றனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், அகலமான சாலைகள், கங்கை நதியில் அழகான படிகள் என வாரணாசி முற்றிலும் மாறிவிட்டது. வாரணாசி மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளும் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு, மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிக புவியியல் குறியீடுகளைப் பெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் தாரக மந்திரம். இதை கருத்தில் கொண்டு காசி தமிழ் சங்க நிகழ்ச்சி வாரணாசியில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டின் ஒற்றுமை வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் (சோனியா காந்தி) நலனுக்காக மட்டுமே அரசு நடத்தப்பட்டது. மத்தியில் ஆட்சியை பிடிக்க பல்வேறு சதிகள் அரங்கேறின. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களின் நலனுக்காக அயராது உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மதியம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அசோக் நகர் பகுதியில் உள்ள இசாகர் குருஜி மகராஜ் கோவிலுக்கு சென்றார். அங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மார்ச் 29-ம் தேதி காணாமல் போனார். 7 நாட்களுக்குப் பிறகு உடல் நலிவுற்ற நிலையில் வீடு திரும்பினார். இந்த ஒரு வாரத்தில் மாணவிக்கு சிலர் போதை மருந்து கொடுத்துள்ளனர்.
அப்போது மாணவியை 23 பேர் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து வாரணாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான முழு விவரங்களை அளிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வாரணாசி விமான நிலையத்தில் பிரதமர் மோடியிடம் மாவட்ட கலெக்டர் ராஜலிங்கம், வாரணாசி போலீஸ் கமிஷனர் மோகித் அகர்வால் ஆகியோர் விரிவான விளக்கம் அளித்தனர்.
கமிஷனர் மோகித் அகர்வால் கூறுகையில், “முக்கிய குற்றவாளி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்” என்றார். தவறு செய்தவர்கள் தப்பக்கூடாது என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.