சென்னை: அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் நடைபெறும் மனிதாபிமானமற்ற அட்டூழியங்களும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலைகளும் உலகளவில் கண்டிக்கப்படும் நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமைத்துவத்தின்’ விளைவு என்றும் மோடி தனது ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இனப்படுகொலை செய்து ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொன்ற நெதன்யாகுவைப் பாராட்டுவது, இந்தியாவின் பாரம்பரிய மனிதாபிமான வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.

1988 முதல் பாலஸ்தீன மக்களின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் இந்தியா அங்கீகரித்து வருகிறது. அந்த வரலாற்று நிலைப்பாட்டை புறக்கணித்து, இனப்படுகொலை செய்த ஒரு ஆட்சியாளரைப் பாராட்டுவது அகிம்சையைப் போதித்த இந்தியாவுக்கு கடுமையான அவப்பெயரை ஏற்படுத்தும். இது இந்தியா மீது உலகம் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை சேதப்படுத்தும்.
“இந்தியாவின் குரல் எப்போதும் மனிதநேயம், அமைதி மற்றும் நீதிக்காக இருக்க வேண்டும்; இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக அல்ல. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”