நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில், அதன் தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார். அப்போது அவர், “இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகளில் வன்முறைகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையை இந்தியாவிலும் உருவாக்க சில தீய சக்திகள் முயற்சி செய்து வருகின்றன” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், “வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது. அது அராஜகத்தை மட்டுமே உருவாக்கும். பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நமக்கு பாடமாக உள்ளது. அரசும் ராணுவமும் ஒன்றிணைந்து தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என எச்சரித்தார். அண்டை நாடுகளில் ஏற்பட்ட கலவரங்கள் மக்களுக்கு எந்த நன்மையும் தரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மோகன் பகவத் தனது உரையில், “சமூகத்தில் தீய சிந்தனைகளை ஊட்டி, இளைஞர்களை தவறான பாதைக்கு தள்ளும் சக்திகள் முற்றிலும் தோல்வியடைந்து விட்டன. நக்சல் இயக்கத்தை மக்கள் நிராகரித்தது அதற்குச் சான்று. சுதேசித் தன்மை, தற்சார்பு, ஒற்றுமை ஆகியவைதான் நாட்டை முன்னேற்றும்” என வலியுறுத்தினார்.
அவரது பேச்சில், “இந்தியா பன்மொழிகள், பல மதங்கள், பல்வேறு கலாசாரங்கள் கொண்ட நாடு. வேற்றுமைகளை விலக்கி அனைவரையும் இணைக்கும் சக்தியே பாரதத்தின் உண்மையான பாரம்பரியம். வன்முறையையும் பிரிவினையையும் மறுத்து, சட்டத்தையும் ஒழுக்கத்தையும் பின்பற்றினால்தான் தேசிய வளர்ச்சி சாத்தியம்” எனக் கூறினார். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.