நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். முன்னதாக, மொராஜி தேசாய் 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1959 முதல் 1964 வரை, மொராஜி தேசாய் 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது அந்த சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். லோக்சபா தேர்தலுக்கு முன், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக பொருளாதார ஆய்வாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தாக்கல் செய்யப்பட்ட 6 மசோதாக்கள்:
நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் 6 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்ய வசதியாக, 1934 ஆம் ஆண்டின் விமானப் போக்குவரத்துச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய வாயுயான் விதேயக் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்ப்புத் திட்டம்:
இதனிடையே நீட் தேர்வு விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இது நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டம்:
மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தை அமைதியான முறையில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.