புதுடெல்லி: டெல்லியில் கடும் மூடுபனி காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
சாலைகளில் அதிக மூடுபனி இருந்ததால் மக்களின் நடமாட்டம் கூட தெரியவில்லை. குறிப்பாக, டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையம், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையம், வாரணாசி, ஆக்ரா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ விமான நிலையங்கள் மிகவும் கடுமையான மூடுபனியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, டெல்லி ஐஜிஐ விமான நிலையத்தில் 217 விமானங்களின் சேவைகள் தாமதமாகியுள்ளன. காலை 10 மணிக்கு வரவிருந்த 149 விமானங்கள் 25 நிமிடங்கள் தாமதமாக வந்தன.
மூடுபனி தொடர்வதால், விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. தங்கள் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரத்தை அறிய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.