புதுடெல்லி: நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், தொழில் செய்ய விரும்புபவர்கள், கடின உடல் உழைப்பு செய்பவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பு மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும் முத்ரா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த பிரதான் மந்திரி முத்ரா திட்டம் ஏப்ரல் 8, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் முத்ரா திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பிணையில்லா கடன்களை ரூ. 10 லட்சம் வரை பிணை இல்லாத கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. முத்ரா திட்ட கடன்கள் சிசு, கிஷோர், தருண், தருண் பிளஸ் என 4 வகைகளில் வழங்கப்படுகிறது. இந்த முத்ரா திட்டம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முத்ரா திட்டம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திட்டத்தின் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்ட அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த பத்தாண்டுகளில் முத்ரா திட்டம் பல கனவுகளை நனவாக்கியுள்ளது. இந்திய மக்களால் முடியாதது எதுவுமில்லை என்பதையே இது காட்டுகிறது. முத்ரா திட்டம் பலரின் கனவுகளை நனவாக்கியுள்ளது. முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் பாதி பேர் SC, ST மற்றும் OBC சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பயனாளிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு முத்ரா கடனும் கண்ணியம், சுயமரியாதை மற்றும் வாய்ப்புகளைப் பற்றியது. வரவிருக்கும் காலங்களில், ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோரும் கடன் பெறும் வகையில் வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும். இது அவர்களுக்கு நம்பிக்கையையும், வளர வாய்ப்பையும் தரும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.