“இந்த பத்தாண்டுகளில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரின் வேலைவாய்ப்பு படிப்படியாக அழிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 30 வருடங்களாக ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் எங்கள் பெற்றோரின் பழைய மாதிரி மெதுவாக இறந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய வேலை அமைப்பு இனி நிலையானதாக இல்லை. கடின உழைப்பாளி வர்க்கத்திற்குப் பதிலாக தானியங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒயிட் காலர் தொழிலாளர்கள் செய்து வந்த பெரும்பாலான பணிகள் தற்போது AI தொழில்நுட்பத்தால் செய்யப்படுகிறது. கூகுள் நிறுவனம் ஏற்கனவே தனது கோடிங் வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு AI ஆல் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளது.

இந்திய தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் நிதித்துறைக்கும் இதே நிலைதான். தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் காரணமாக, நடுத்தர வணிகங்கள் இப்போது உயிர்வாழ்வதற்கான சவால்களை எதிர்கொள்கின்றன. நடுத்தர வருமானம் பெறுபவரைச் சூழ்ந்திருக்கும் இருளும் அழிவும் இருந்தபோதிலும், அரசாங்கம் அமைதியாக சில சாதனைகளைச் செய்துள்ளது. அதன்படி, ஜன்தன், ஆதார் மற்றும் மொபைலை இணைத்துள்ளது. இது வரவிருக்கும் தொழில்முனைவோர் அலைக்கு நல்ல களமாக அமையும். தொழில்முனைவோராகிய நாம் கார்ப்பரேட் தொழில்கள் காட்டும் புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் பயன்படுத்தினால், நாம் செழிப்பின் புதிய இயந்திரமாக மாறலாம்.
இந்திய சமூகம் ஸ்திரத்தன்மை மற்றும் சம்பளம் தொடர்பான தத்துவங்களை மாற்ற வேண்டும். இவ்வாறு சவுரப் முகர்ஜி கூறியுள்ளார். பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறுகையில், ”ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் போக்கு பல ஆண்டுகளாக மாறி வருகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தவிர, 60-70 சதவீத நிறுவனங்களில் இந்த நடைமுறை இல்லை. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, மனிதர்கள் செய்யும் பல்வேறு பணிகளை மிகக் குறைந்த நேரத்திலும், குறைந்த செலவிலும் சிறப்பாகச் செய்ய முடியும். கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே வங்கிகளும், ரயில்வேயும் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் என்று கூறியது. மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டும் இருக்கும் வரை, புதிய வேலை வாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்படும்,” என்றார்.