மும்பை வாடாலா பகுதியில் வசிக்கும் 71 வயது மூதாட்டி, ஆன்லைன் டெலிவரி ஆப்பில் பால் ஆர்டர் செய்ய முயன்றார். அப்போது, தீபக் என்ற பெயரில் ஒருவர் அவருக்கு அழைப்பு வைத்து, “ஆர்டர் செய்ய தேவையான விவரங்களை தர வேண்டும்” என கூறினார்.
பின்னர் அவர் ஒரு லிங்க் அனுப்பி, அதிலுள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு வற்புறுத்தினார். மூதாட்டி நம்பி தனது விவரங்களை கொடுத்ததால், தொடர்ந்து கூடுதல் தகவல்களையும் அந்த மோசடி நபருக்கு வழங்க நேரிட்டது.

இதன் விளைவாக, மூதாட்டி வைத்திருந்த 3 வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.18.5 லட்சம் பணம் மோசடியாக எடுத்துச் செல்லப்பட்டது. அதிர்ச்சியடைந்த மூதாட்டி உடனடியாக போலீசில் புகார் செய்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், அழைப்பு எங்கிருந்து வந்தது, லிங்க் அனுப்பியவர் யார் என்பதற்கான விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.