புதுச்சேரி: தமிழகத்தில் மதுவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் பார்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்த்தப்பட்டுள்ளதற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி நகரின் முக்கிய நான்கு சாலைகளில் 50 மதுக்கடைகள் உள்ளன. அது இல்லாமல் ரெஸ்டோபார்களும் உள்ளன. இந்த அளவுக்கு மதுக்கடைகள் திறந்தால் புதுச்சேரி வாழுமா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் மதுவிலக்கு போராட்டத்தை திருமாவளவன் முன்னின்று நடத்தி வருகிறார். மதுவுக்கு எதிர்ப்பு உள்ளது. புதுச்சேரி மதுக்கடைகளின் மாநிலம். இவற்றை மூட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 400 பார்கள் இருந்தன.
மது விற்பனை கட்டுக்குள் இருந்தது. ஆனால் தற்போது புதுச்சேரியில் 900 பார்கள் உள்ளன. லஞ்சம் வாங்கி ரெஸ்டோ பார்களை நடத்த அனுமதிக்கின்றனர்.
ஒரே உரிமத்தில் இயங்கும் 3 கடைகள். இவற்றை யாரும் கண்காணிப்பதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்யவோ, நிர்வாகத்தில் தலையிடவோ அதிகாரம் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரியாமல் அவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.